அரசியல்தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், இடஒதுக்கீடுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது- துணைவேந்தர் சூரப்பா!

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், 69% இட ஒதுக்கீடுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த உயர் சிறப்பு அந்தஸ்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அதற்கான நிதி ஆதாரத்தை பல்கலைக்கழகமே திரட்டிக் கொள்ளும் என்றும் மத்திய உயர்கல்வி செயலாளர் அமித் கரேவுக்கு, அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியிருந்தார். சூரப்பாவின் கடிதத்தை பரிசீலித்த மத்திய அரசு, அதற்கான ஒப்புதலை வழங்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் இட ஒதுக்கீடு கொள்கையை காவு கொடுக்க துணைவேந்தர் சூரப்பா முயற்சிப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு உயர் சிறப்பு அந்தஸ்தை வழங்கினாலும், பல்கலைக்கழகம் தொடர்ந்து மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், பல்கலைக்கழகத்தில் அமலில் இருந்து வரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.இட ஒதுக்கீடு குறித்து கடந்த 2017-ல் வெளியிடப்பட்ட விதிமுறைகளில் தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீடு குறித்து யாரும் வீணாக அச்சப்படத் தேவையில்லை என்றும் துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசு தரப்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியிருந்த துணைவேந்தர் சூரப்பாவின் செயலுக்கு திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button