தமிழ்நாடுவிளையாட்டு

கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்ற செயற்கை எண்ணத்தை இளைஞர்கள் எண்ணத்தில் ஏற்படுத்த வேண்டாம் – உயர்நீதிமன்றம்

மனிதனின் ஆரோக்கியத்தை காத்திடும் அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும்...

மதுரை மாவட்டம், துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கங்கள் பெறுகின்றனர்.

பதக்கம் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரொக்கப்பரிசாக மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்குகிறது. பொதுவான ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை விருது மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது. மாநில அரசோ ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வழங்குகிறது.

அனைத்து விதமான வீரர்களையும் மத்திய, மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை. சட்டப்படி அனைத்து விதமான விளையாட்டு வீரர்களையும் சமமாக நடத்த வேண்டும். ஹரியானா மாநில அரசு சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்களை அங்கீகரித்துள்ளது.

வேலை வாய்ப்பு, ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. அதுபோல் தமிழகத்திலும், சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன.  அப்போது நீதிபதிகள், ‘‘இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. அது மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளனர். இது தவறான நடைமுறையாகும். மனிதனின் ஆரோக்கியத்தை காத்திடும் பல வகையான விளையாட்டுகள் இந்தியாவில் உள்ளன.

கபடி, கால்பந்து, ஹாக்கி, ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் சிறப்பானவை. அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும். பிற விளையாட்டுகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறி, மனுக்கள் மீதான விசாரணையை அக். 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button