அரசியல்கவர் ஸ்டோரிசென்னை

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் குறித்து முடிவு எட்டப்படாததால், மோதல்கள் வலுத்தன. செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலித்தது.

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விடிய விடிய ஆலோசனை நடத்தினார்.

அதேபோல் சி.வி.,சண்முகம், கே.பி.முனுசாமி, உள்ளிட்டோருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தினார். இரு தரப்பினர் உடனான பேச்சுவார்த்தை இன்று அதிகாலை வரை நீடித்தது.

இதுகுறித்து அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்மான பணிகள் நடைபெற்றதாகவும் இன்று காலை பத்து மணிக்கு நல்ல செய்தி வரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று அதிகாரபூர்வமாக அறிக்கப்பட உள்ளதால் சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.

இதனையடுத்து கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 11 கொண்ட வழிகாட்டுதல் குழுவை வெளிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதனை தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவித்தார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button