செய்திகள்விளையாட்டு

கடைசி இடத்தில் சென்னை அணி – அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த அண்டு சென்னை அணி லீக் போட்டிகள் முடிவில் முதல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் எதிர்பாராத சம்பவங்கள் களத்தில் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த சென்னை அணி முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியது முதலே விறுவிறுப்பான நிகழ்வுகளுக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை இருக்கையின் நுனியில் கட்டிப்போட்டுள்ளது என்றே சொல்லலாம்.

இதுவரை நடந்த 11 போட்டிகளில் இரண்டு போட்டிகள் சூப்பர் ஓவர் வரை சென்றது. அதேபோல் கடந்த சீசனில் சொதப்பிய டெல்லி, பஞ்சாப் அணிகள் அதிரடியாக விளையாடி வெற்றிப்பெற்று வருகின்றன. அதேசமயம் பெரும்பாலான போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

துபாய் மைதானங்கள் சிறியதாக இருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்களும் பந்துவீச்சின்போது 50 ரன்களை சாதாரணமாக விட்டுக்கொடுக்கின்றனர். அதேசமயம் நடுவர்களின் முடிவுகளும் பாரபட்சமின்றி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான், கொல்கத்தா தவிர மற்ற 6 அணிகளும் 3 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணி பின்தங்கியுள்ளது. இது தற்காலிகமானது தான் என்றாலும் மீண்டும் சென்னை சிங்கங்கள் தங்களை நிரூபிக்கும் என அந்த அணியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக அக்டோபர் 2 ஆம் தேதி ஹைதரபாத் அணியை எதிர்கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button