இந்தியாகவர் ஸ்டோரிதமிழ்நாடு

2ஜி மேல்முறையீட்டு வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தனியார் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இதனால், அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 17 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி விடுவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி அமலாக்கப் பிரிவும், 20-ம் தேதி சிபிஐ அமைப்பும் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கின்போது, தனது வாதத்தைக் கடந்த ஜனவரி 15-ம் தேதியுடன் சிபிஐ தரப்பு முடித்துக்கொண்டது.

அதே சமயத்தில் இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி, நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறுவதால், அதற்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். அத்துடன், இந்த வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றினால் இன்னும் தாமதமாகலாம் எனக் கூறி சிபிஐ, அமலாக்கப் பிரிவு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் அளிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீண்டகாலமாக அரசின் செலவில் நடந்து வரும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனத் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் 2ஜி வழக்கை விரைந்து விசாரிப்பதுடன், இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ, அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐ, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button