செய்திகள்விளையாட்டு

தொடரும் தோல்வி… சென்னை அணியை வீழ்த்தி கெத்து காட்டிய டெல்லி அணி

தொடர்ந்து 2 போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் டெல்லி அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.

13வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 7வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர். அந்த அணியில் பிரித்வி ஷா 64 ரன்கள், தவான் 35 ரன்கள், ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க தடுமாறினர். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணியால் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகப்பட்சமாக அந்த அணியில் பாப் டூ பிளிஸ்சிஸ் 43 ரன்களும், கேதர் ஜாதவ் 27 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி வெற்றி பெற்றது.

இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியோ 2 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியுடன் சேர்த்து இதுவரை நடந்த 7 போட்டிகளில் 6 போட்டிகள் முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button