கிரைம்தமிழ்நாடு

மேலாளரை கத்தியால் குத்திய காவலாளி – பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம்

பணிநீக்கம் செய்யப்பட்டதால் காவலாளி அன்புநாதன் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார்.

மேலாளர் புகாரால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி, அவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் காவலாளியாக ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்த அன்புநாதன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.

பணியில் கண்டிப்பானவரான திருமுருகன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வராத காவலாளி அன்புநாதனை எச்சரித்துள்ளார். தொடர்ந்து இதே நிலை தொடரவே, அன்புநாதன் பணிக்கு சரிவர வராதது குறித்து மேலிட நிர்வாகத்திற்கு புகார் அளித்தார். இதனை விசாரித்த மேலிட நிர்வாக அதிகாரிகள், அன்புநாதனை காவலாளி பணியில் இருந்து நீக்கினர்.

இதனிடையே பணிநீக்கம் செய்யப்பட்ட அன்புநாதன் மீண்டும் உத்தரவை மீறி பணி வந்துள்ளார். அவரை மேலாளர் திருமுருகன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலாளி அன்புநாதன், மேலாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளி அன்புநாதனை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button