தமிழ்நாடுமதுரை

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் செத்து கிடக்கும் மீன்கள் – பக்தர்கள் அதிர்ச்சி

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கை சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தெய்வீகப் புலவர் நக்கீரர் தவம் செய்த சிறப்புக் கொண்டது இந்த கோயில். தினசரி பொய்கையின் நீரை எடுத்துச் சென்றுதான் முருகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்படும். மேலும் பக்தர்கள் விரதமிருந்து தினமும் நீராடும் இடமாக சரவணப் பொய்கை திகழ்கிறது.

பொய்கையில் உள்ள மீன்களைப் பிடிக்க, கடந்த ஜுன் மாதம் கோயில் நிர்வாகம் சார்பில் குத்தகைக்கு விடப்பட்டது. இதையடுத்து, குத்தகைக்கு எடுத்தவர் பல ஆயிரம் மீன் குஞ்சுகளை பொய்கையில் விட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில், பொய்கை குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்துள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. மீன்கள் இறந்துகிடந்ததைக் கண்ட பொதுமக்கள் மற்றும் கோயில் ஊழியர்களும் சேர்ந்து குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கோயில் துணை ஆணையர் கூறியதாவது: குளத்தில் மீன் இறந்து கிடந்தது மிகவும் கவலைக்குரியது. குளத்தின் தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில்தான் பொய்கையில் விஷம் கலக்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரியவரும். இதுகுறித்து மீன்வளத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார். மேலும் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2016 செப்டம்பர் 4 ஆம் தேதி பொய்கையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதத்தன. விஷமிகள் சிலர் பொய்கையில் விஷத்தை கலந்ததால் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதாக அப்போதைய சிபிஎம் நகர செயலாளர் மகாமுனி கூறுயிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button