கர்நாடகா

கொரோனா தொற்றால் பாஜக எம்.பி. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் – தலைவர்கள் இரங்கல்

உலகைத்தை  புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸால், கடந்த 10 மாதங்களில் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . நோய் தொற்றுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 கோடியே 20 லட்சம் பேர் குணமடைந்த நிலையில், சுமார் 73 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனது வேகத்தை சற்றும் குறைக்காமல் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் தொற்றின் தாக்கும் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 52 லட்சம் பேர் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 83 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா பாகுபாடி இன்றி தாக்கி வருவதால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், எம்.பி.க்கள், மாநில அமைச்சர்கள். எம்.எல்.ஏ.க்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் வைரஸ் தாக்கி வருகிறது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உயிரிழந்தார். இதேபோல் காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் வைரசால் பாதிக்கப்பட்டு அண்மையில்  சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்.பி அசோக் கஸ்தி உயிரிழந்தார். அவருக்கு வயது 55. கடந்த ஜூலை மாதம் தான் அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.

கடந்த 2 ஆம் தேதி கொரோனா பரிசோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வேறு சில உடல் பிரச்னைகளும் இருந்ததாக  கூறப்படுகிறது.

கர்நாடாக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் அசோக் கஸ்தி. தொழில்முறை வழக்கறிஞரான இவர், அடிப்படையில் அகில வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இருந்தவர். பின்னர் தனது 18 ஆவது வயதில் பாரதிய ஜனதா கட்சியில் அசோக் கஸ்தி உறுப்பினரானார். பிறகு அக்கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்தபோது, ஆர்எஸ்எஸ் மேலிட தலைவர்களுடன் அவர் மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

அசோக் கஸ்தியின் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இரண்டாவது எம்.பி. உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button