அரசியல்இந்தியாகவர் ஸ்டோரி

இந்திய கலாச்சார நிபுணர் குழுவில் தென்மாநில பிரதிநிதிகள் இல்லை – பாஜக அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

இந்தியக் கலாச்சாரத்தின் தொன்மையான வரலாற்றினை ஆய்வு செய்து நிறுவுவதற்காக,  கலாச்சார நிபுணர் குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக்குழு தற்காலத்திலிருந்து 12,000 வருடங்களுக்கு முன்பு வரையிலான இந்தியக் கலாசாரம் குறித்தும் அதன் துவக்கம் குறித்தும் ஆராயும் என மத்திய கலாச்சார – சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த நிபுணர் குழுவில், இந்தியத் தொல்பொருள் துறைத் தலைவர் கே.என்.தீட்சித் உள்பட 16 பேர் உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்துள்ளது. ஆனால்,  தென் மாநிலங்களின் பிரதிநிதிகள், மேற்கு வங்கம் பிரநிதிகள், கிழக்கு இந்திய பகுதிகளின் பிரதிநிதிகள் யாரும் இந்த குழுவில் இடம் பெறவில்லை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு வைகோ, கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே கொள்கை மூலம், வெளிப்படையாகவே வேத கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது. இந்திய வரலாற்றின் கலை, நாகரிகம், பண்பாடு குறித்து ஆய்வு செய்வது என்றால், அனைத்து மாநில அறிஞர்களையும் இந்தக் குழுவில் இடம் பெறச் செய்திட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை ? சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா ? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா ? இவ்வாறு  தனது டுவிட்டர் பதிவில் கனிமொழி எம்.பி. பதிவிட்டுள்ளனர். இதேபோல், மதுரை எம்.பி. வெங்கடேசன், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி  உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கலாச்சார நிபுணர் குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது குறித்து  பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி கூறுகையில், ஒரு பழைய விவகாரத்தை எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டுகிறார்.இந்த விவகாரத்தை ஜாதி ரீதியாக அணுகுவதே தவறு.

இக்குழுவில் தென்னிந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை என்ற கருத்து இருக்குமானால், குழுவை மாற்றியமைக்கலாம் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் தன்னிடம் கூறியதாக நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button