கிரைம்தஞ்சாவூர்தமிழ்நாடு

மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த பக்கத்து வீட்டுக்காரர் வெட்டிக்கொலை – தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் துருசுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (38). இவருக்கு மனைவி வீரச்செல்வி, ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். வீரையன் விவசாய கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குருநாதன் (25) என்பவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி சித்ரா (22), இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குருநாதன் திருப்பூரில் பணிபுரிந்துவந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்த வீரையனும் குருநாதனின் மனைவி சித்ராவும் நெருங்கி பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த குருநாதன், இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் வீரையனும், சித்ராவும் அடிக்கடி சந்தித்து தனது கள்ளக்காதலை வளர்த்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குருநாதன், மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த வீரையனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அதன்படி, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வீரையன் மற்றும் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டின் மீது குருநாதனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சரமாரியாக கல்லெறிந்துள்ளனர்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வீரையன் கதவை திறந்து வெளியே வந்தபோது, குருநாதனும் அவரது கூட்டாளிகளும் கட்டை மற்றும் அரிவாளால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த வீரையனை, அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக, செங்கிப்பட்டி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குருநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவருகின்றனர். வேறொருவரின் மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்ததால், 4 குழந்தைகளின் தந்தை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button