கிரைம்சிவகங்கைதமிழ்நாடு

முதல்வரிடம் முதல் பரிசு வாங்கிய மாணவி தூக்கிட்டு தற்கொலை – சிவகங்கையில் சோக சம்பவம்

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது தமிழகத்தில் தொடர் கதையாகி வருகிறது. நீட் தேர்வுக்கு பயந்து 15 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அண்மையில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், ஆன்லைன் பாடங்களாலும் தற்கொலைகள் தொடருகின்றன.

சிவகங்கையை அடுத்த திருப்புவனம் செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. ஆட்டோ ஓட்டுநரான இவருடைய மகள் சுபிக்‌ஷா, மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்துள்ளார். ஆனால், ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களை மாணவி சுபிக்‌ஷாவால் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார்.

மேலும், சரியாக உறக்கம் இல்லாமல் தினந்தோறும் வீட்டு பாடங்களை செய்து வந்ததால், அவர் சோர்வாகவே காணப்பட்டார். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர், பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்ற அச்சம் சுபிக்ஷாவுக்குள் எழுந்துள்ளது.

இந்தநிலையில், ஆன்லைன் வகுப்புகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி சுபிக்‌ஷா, நேற்றிரவு வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்புவனம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2017-ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் எம்.ஜி.ஆர். பற்றி பேசி அசத்தியவர் மாணவி சுபிக்‌ஷா. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர் பரிசும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button