கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறைந்ததால் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்கள், மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும், இதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டிருந்தாா். இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனையடுத்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், கடந்த மார்ச் 21-ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது.  இந்த குழுவில், உயா்கல்வி, பள்ளிக்கல்வி, சுகாதாரத்துறை முதன்மை செயலாளா்கள், மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கை செயலாளா் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 7 புள்ளி 5 சதவீதம் மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தாக்கல் செய்தார். இதன் மூலம் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளில், தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், நடப்பு கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சமூகப் பின்னணியில் வேறுபாடு உள்ளவர்களாக இருப்பதால், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயன் அடைவார்கள் என்றும் இதன் மூலம் 300 க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் என அவர் உறுதியளித்தார்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதால், இதன் மூலமும் 1,250 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றும், உள் ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் சமூக நிதி பெறுவதற்கு வழிவகை செய்யும் எனவும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார். வரும் காலத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button