கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

மாணவர்களின் தற்கொலையை தமிழக அரசே ஊக்குவிக்கிறது – சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வை கட்டாயம் எழுத வேண்டுமென மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், கடந்த 2016ம் ஆண்டு சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் நீட் நுழைவுத் தேர்வு நடந்து வருகிறது. நீட் தேர்வு அச்சத்தால் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி, கோவை சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டும் நீட் மரணங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது கவலை அளிக்கிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ் (19), நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல், நீட் தேர்வு எழுத தயாராகி வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மாணவன் மோதிலால், மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, தருமபுரி இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவன் ஆதித்யா, ஆகியோர் தேர்வு அச்சத்தால் கடந்த 12 ஆம் தேதி ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

முன்னதாக, நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீட் தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்தநிலையில், நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, அவர்களின் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் தேர்வு அச்சத்தால் கடந்த சனிக்கிழமை 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அமர்வில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையீடு செய்தார்.

அதில் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக சூரியபிரகாசம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நீதிமன்றம்,  மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளதாக தெரிவித்தது. மேலும் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button