சினிமாதமிழ்நாடு

ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதி நடித்த புதிய திரைப்படம் வெளியீடு?

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனிநபர் இடைவெளியுடன் காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில் சூர்யா முடிவெடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள பாரதிராஜா, ஓடிடியில் வெளியிட சூர்யா எடுத்த முடிவு வரவேற்க கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, உலக நாடுகள் முடங்கி போயின. தொழில்கள் முடங்கியதால், பொருளாதாரமும் அகல பாதளத்திற்கு சென்று விட்டது. இதேபோல் பொது முடக்கத்தால் திரைத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக திரையரங்குகள் திறக்கப்படாததால், திரைப்படங்கள் வெளியாகுவதில் சிக்கல்கள் நீடித்தன. இது தமிழக திரையுலகத்திற்கு பேரிடியாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படமும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பென்குயின்’ படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகின. மேலும் சூர்யாவின் படமான ‘சூரரைப் போற்று’ படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு தரப்பினர், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சிவக்குமார் குடும்பத்தினரின் திரைப்படங்களை இனி தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என அறிவித்தனர். ஆனால், புதிய திரைப்படங்களை, ஓ.டி.டி தள உரிமையாளர்களும் நல்ல விலைக்கு வாங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படமும், நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதே நேரம் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட ஓ.டி.டி உரிமையாளர்கள் பெரும் தொகையை தர முன்வந்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கணவர் பெயர் ரணசிங்கம் வெளியாகிறது.  விருமாண்டி இயக்கியுள்ள ‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் பாணியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக ‘கணவர் பெயர் ரணசிங்கம்’ உள்ளது.

திரையரங்குகள் திறந்தாலும் படங்களை பார்க்க, அதிகளவில் மக்கள் இனி வருவார்களா? என்பது கேள்வியாக உள்ளது. எனவே தான் ஓ.டி.டி தளத்தின் வழியாக புதிய திரைப்படங்களை பார்ப்பதற்கான முடிவை திரைத்துறை பிரபலங்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button