இந்தியாகவர் ஸ்டோரிஹெல்த்

ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம் – இந்தியாவில் பரிசோதனை தொடரும்

சீரம் இன்ஸ்டிட்யூட் அறிவிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு சுமார் 2 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் சுமார் 9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் சுமார் 44 லட்சத்து 65 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலகம் முழுவதும் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை பல மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் அனைத்தும் சோதனை நிலையிலேயே உள்ளன.

இதனிடையே,  இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைத் தயாரித்து வருகின்றன.  முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பல நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மூன்றாம் கட்ட பரிசோதனையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட பலருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பெரிய அளவில் பரிசோதனை நடத்தப்படும்போது, தற்செயலாக இவ்வாறு உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால், அதனை கவனமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ஃபோர்டு ஆய்வுக்குழுவுடன் சேர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தயாரிப்புக்கு ஒப்பந்தம் செய்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட், அஸ்ட்ராசெனிகா பரிசோதனை நடவடிக்கையை நிறுத்தியதாக வெளியாகும் தகவல் பற்றி கருத்து கூற முடியாது என தெரிவித்தது.

மேலும், அந்த நிறுவனம் பரிசோதனையை மறு ஆய்வுக்காகவே அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றும் விரைவில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் எனவும் கூறியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, எந்த பிரச்னயைும் எதிர்கொள்ளவில்லை என்பதால், தொடர்ந்து இந்தியாவில் பரிசோதனை தொடரும் என்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அண்மையில் ரஷ்யா அரசு வெளியிட்டது. அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்து, அந்நாட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த போதிலும், ரஷ்யாவின் தடுப்பு மருந்தை உலக நாடுகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற ரஷ்ய அரசின் கோரிக்கையை எளிமைப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button