இந்தியாகேரளா

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றச் சென்ற எஸ்டிபிஐ கட்சி தொண்டர் வெட்டிக் கொலை – பாஜக மீது புகார்

கண்ணூர் மாவட்டத்தில் கடந்த ஒரே வாரத்தில் நடைபெறும் 3வது அரசியல் படுகொலை

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சையது முகமது சலாகுதீன். 30 வயதான இவருக்கு, நஜீபா என்ற மனைவியும், அஸ்வா, ஹாதியா என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது 2 சகோதரிகளுடன் சித்தாரிபரம்பா என்ற இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது, 2 நபர்கள், இவர் கார் மீது வந்து மோதி கீழே விழுந்துள்ளனர்.

அவர்கள் விபத்தில் சிக்கியதாக நினைத்து, சலாகுதீன் தனது காரை, நிறுத்தி, அவர்களை தூக்கச் சென்றபோது, அவர்கள் திடீரென காரின் சாவியை எடுத்த வைத்துக் கொண்டு, தாக்கத் தொடங்கியுள்ளனர்.  அப்போது, அங்கு மற்றொரு கார் மற்றும் ஆட்டோவில், மறைந்திருந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், சலாகுதீனை அவரது சகோதரிகளின் கண்முன்னே கொடூரமாக வெட்டிச் சாய்த்தது. விபத்து ஏற்படுத்துவது போல், நடித்து, கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.

கொடூரத் தாக்குதலில் படுகாயம் அடைந்த சலாகுதீன், தலச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனது சகோதரன் தங்கள் கண் முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்படுவதை பார்த்த, 2 சகோதரிகளும், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  இந்த கொலைச் சம்பவத்திற்கு பின்னணியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இருப்பதாக எஸ்டிபிஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சலாகுதீன் உள்ளிட்ட எஸ்டிபிஐ நிர்வாகிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே அரசியல் பகை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 3 பாஜகவினரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் கடந்த ஒரே வாரத்தில் நடைபெறும் 3வது அரசியல் படுகொலை இது என கூறப்படுகிறது. கேரளாவில் குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் சிபிஎம், பாஜக, எஸ்டிபிஐ இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கொலையான சலாகுதீன், சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை எதிர்த்து தீவிரமாக போராடியவர் என்பதோடு, எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button