அரசியல்தமிழ்நாடுராமநாதபுரம்

கொலை செய்யப்பட்ட ஹிந்து முன்னணி பொறுப்பாளரின் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி- நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கினார்.

இராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி கமிட்டி பொறுப்பாளர் அருண்பிரகாஷ் இரு நாட்களுக்கு முன் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இதை அறிந்த இந்து முன்னணி, பாஜக மற்றும் மருது சேனை அமைப்புகளின் சார்பில் அங்கு போராட்டம் செய்யப்பட்டது. மேலும் சமுகவலைதளங்களிலும் மத மோதல் என்றே பரப்புரை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹ.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என மத மோதலை உண்டுபண்ணும் விதமாக பதிவிட்டார்

ஆனால் காவல்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில் பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் எனத் தெரியவந்துள்ளது. இது பற்றி ராமநாதபுரம் காவல்துறை சார்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் “இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்” எனக் கூறப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று இராமநாதபுரத்துக்கு சென்ற பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா காவல்துறையை கடுமையாக விமர்சித்தார். மேலும் இராமநாதபுரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாகி விட்டது என்றும் விமர்சித்தார். மேலும் இராமநாதபுரம் நவாஸ்கனியையும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணை போகிறார் என விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் உறுப்பினருமான நவாஸ்கனி கொலை செய்யப்பட்ட அருண் பிரகாஷின் குடும்பத்தினரை சந்தித்து 1 லட்சம் ரூபாயை வழங்கினார். மேலும் “இராமநாதபுரம் என்றுமே நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் முன்னுதாரணமான மாவட்டம். எந்தவித பாகுபாடுகளும் அல்லாமல் சகோதர வாஞ்சையோடு அனைவரையும் அரவணைத்து உறவுமுறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே, சகோதர வாஞ்சையோடு அந்த குடும்பத்தினரை சந்தித்து அவர்களுடைய துயரத்தில் பங்கெடுத்தோம். குற்றவாளிகள் யாராயினும் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
உரிய நீதியை பெற்றுத்தர உடனிருப்போம்” எனவும் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button