அரசியல்இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு பாஜகவுடன் தொடர்பு என ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு- இதன் பின்னணி என்ன ?

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலருக்கு பா.ஜ.க. உடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத் தொடர்ந்து, அவரது தாயார் சோனியா காந்தி, கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது, தலைவர் பதவியை சோனியா காந்தி தொடர வேண்டும் என, காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இதனையடுத்து பேசிய சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் என்றும், இடைக்கால தலைவராக தொடர விருப்பம் இல்லை எனவும் பேசியதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, தலைமையில் மாற்றம் தேவை என கடிதம் எழுதியவர்களின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாகவும், சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய 23 தலைவர்கள் பா.ஜ.க.வுடன் தொடர்புடையவர்கள் எனவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடந்த 30 ஆண்டுகளில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக ஒரு கருத்து கூட கூறியதில்லை என்றும், ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி கண்டதாகவும், டுவிட்டர் பக்கத்தில் கபில் சிபல் கூறியுள்ளார். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியது. உடனடியாக தமது டுவிட்டர் பதிவை கபில் சிபல் நீக்கியுள்ளார். சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய தலைவர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பா.ஜ.க.வுடன் நாங்கள் தொடர்பில் இருப்பதை நிரூபித்தால் விலகத் தயார் என குலாம் நபி ஆசாத் காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

8 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button