அரசியல்இந்தியா

அயோத்தியில் இஸ்லாமியருக்கு கொடுத்த இடத்தில் அமையவிருக்கும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னம் !

அயோத்தியில் இஸ்லாமியருக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் மசூதியுடன் மருத்துவமனை, ஆய்வு மையம், நூலகம், அருங்காட்சியகம், சமுதாய உணவுக்கூடம் போன்றவை அமைக்கப்பட இருக்கிறது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் அந்த இடம் யாருக்கு சொந்தம் என சர்ச்சை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், இந்த இடம் ராமர் கோவில் கட்ட வழங்கப்படும் என்று அறிவித்தது. அதே போல மசூதி கட்ட தேவையான இடத்தை உத்தர பிரதேச அரசுக்கு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர்கோவில் கட்ட அடிக்கல்நாட்டு பூஜையும் முடிவடைந்தது. இந்த பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதை தொடர்ந்து அங்கு கோவில் கட்டுமானமும் தொடங்கப்பட்டுள்ளது.

அதே போல நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டபடி அயோத்தியில் சன்னி வக்பு வாரியத்துக்கு உத்தர பிரதேச அரசு சார்பில் 5 ஏக்கர் நிலமும் கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் மசூதி கட்டும் பணியை மேற்பார்வையிட சன்னி வக்பு வாரியம் ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளது. ‘இந்தோ-இஸ்லாமிய கலாசார பவுண்டேசன்’(ஐஐசிஎப்) என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் தலைவர் சுபர் அகமது பரூக்கி அறிவித்திருந்தார். இந்த 5 ஏக்கர் நிலத்தில் மசூதியை தவிர உயர்தர சிகிச்சைக்கான மருத்துவமனை, ஆய்வு மையம், நூலகம், அருங்காட்சியகம், சமுதாய உணவுக்கூடம் போன்றவை அமைக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், ஐஐசிஎப் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அத்தர் உசைன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது “‘அயோத்தியில் நிலப் பிரச்சினை காரணமாக நாடு முழுவதிலும் இந்து-முஸ்லிம் மக்களிடையே மோதல் உருவாகும் சூழல் இருந்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை இருதரப்பினரும் ஏற்றதால் அயோத்தியில் கோயிலும், மசூதியும் அமைகின்றன. பாபர் மசூதிக்கு பதிலாகக் கட்டப்படும் புதிய மசூதியுடன் அமைபவை நாட்டின் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாக அமையும். ஆங்கிலேயரை எதிர்க்க இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்தது போன்ற நிலை இனி உருவாகும்” எனக் கூறியுள்ளார்

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button