அரசியல்உலகம்கவர் ஸ்டோரி

ஒரு நாட்டையே வாங்கிய வங்கியின் கதை…! இது சாத்தியமானது எப்படி ?

வங்கிகளின் வேலை என்ன? நம் பணத்தை சேமித்து வைப்பார்கள், கடன் கொடுப்பார்கள், பண பரிமாற்றம் செய்வார்கள், பொருளை அடகு வைத்து பணம் கொடுப்பார்கள். வங்கியை பற்றி நாம் அறிந்தது இது தான். ஆனால் ஒரு நாட்டையே வாங்கிய வங்கியை பற்றி அறிவீர்களா? வங்கி எப்படி ஒரு நாட்டை வாங்க முடியும் என்று சந்தேகம் வந்தால் இந்த கட்டுரையை முழுமையாக படியுங்கள். அதன் முடிவில் எப்படி அது நடந்தது என்று அறிவீர்கள்.

இஸ்ரேல் என்கிற நாட்டை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எகிப்தின் அருகே மத்திய தரைக்கடலை ஒட்டி இருக்கும் ஒரு நாடு. அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் யூத இனத்தை சேர்ந்தவர்கள் தான். யூத மதம் என்பது அவர்கள் பின்பற்றும் மதம். இந்த நாடு உருவானதில் பெரும்பங்கு ஒரு வங்கிக்கு உள்ளது. ஆம் ! அந்த வங்கியின் பெயர் தான் ‘நில வங்கி’ (Land Bank).

அந்த வங்கியை பற்றி பேசும்முன் யூதர்களை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய இஸ்ரேல், பாலஸ்தீன் பகுதிகளை ஒரு காலத்தில் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி புரிந்தவர்கள் யூதர்கள். டேவிட், சாலமன் போன்ற புகழ்பெற்ற மன்னர்களும் அவர்களில் இருந்தனர். பிறகு அசிரிய, கிரேக்க, ரோம அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் இருந்தாலும், அவர்களின் போர்குணத்தால் பலமுறை பாலஸ்தீன பகுதியை விட்டு துரத்தப்பட்டு மீண்டும் அங்கு வந்து குடியேறியிருக்கிறார்கள்.

ஆனால் முதலாம் நூற்றாண்டில் ரோமர்களால் யூதர்களின் தலைநகராக விளங்கிய ஜெருசலேம் அழிக்கப்பட்டு அந்த பகுதிகளில் இருந்து யூதர்கள் துரத்தப்பட்டனர். அப்படி உலகம் முழுவதும் சென்றவர்கள் அந்தந்த பகுதியில் ஒன்றாகவே வசித்து வந்தனர். அதோடு தங்கள் மொழி மற்றும் மத நம்பிக்கைகளை அழியவிடாமல் காத்தும்வந்தனர். அதே நேரம் அரேபியரும் பாலஸ்தீனம் முழுக்க பரவி வசித்து வந்தனர்.

இப்படி பல நூற்றாண்டுகளாக நாடற்றவர்களாக இருந்த யூதர்கள், அவர்கள் வாழ்ந்த நாட்டையும் சொந்த நாடாகக் கருதவில்லை. அவர்கள் மூதாதையர் வாழ்ந்த பாலஸ்தீனியத்தையே சொந்த நாடாகக் கருதினர். எப்போதாவது அது யூதர்களின் சொந்த நாடாகும் என்று அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் சொல்லிச் சொல்லியே வளர்த்தனர். இப்படி இருந்த யூதர்கள் உலகம் முழுவதும் கடும் உழைப்பின் மூலம் பெரும் பணக்காரர்களாகவே திகழ்ந்தனர். தொழிலில் புது யுக்தியை பயன்படுத்தி பெரும் செல்வத்தையும் கையிருப்பாக வைத்திருந்தனர். அது மட்டுமல்லாமல் அரசியலில் ஈடுபட்டு அங்கும் செல்வாக்கோடு தான் திகழ்ந்தனர். இங்கிலாந்தின் பிரதமராக இருந்த ‘பெஞ்சமின் டிஇஸ்ரேலி’ என்பவர் கூட யூத இனத்தைச் சேர்ந்தவர் தான்.

இப்படி பலமாக திகழ்ந்தவர்களுக்கு இந்த பலத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீன நாட்டை தனக்குச் சொந்தமாக மாற்ற வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. அதன்படி ஜெர்மனியை சேர்ந்த ‘தியோடர் ஹெசில்’ என்பவர் ஜெர்மனியின் மிகப் பெரிய ஆறு பணக்காரர்களை அழைத்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கும் யோசனையைப் பற்றி கூறினார். அந்தத் திட்டம் தான் ஜியோனிசம் (Zionism) என்று அழைக்கப்படும் பாலஸ்தீனத்தை யூத நாடாக மாற்றும் திட்டம். அங்கு உதித்தது தான் ‘நில வங்கி’ (Land Bank) பற்றிய திட்டமும்.

இந்த திட்டத்தின் படி பணத்தை கொண்டு ஒரு வங்கியை தொடங்கி, அதை வைத்து ஒரு நாட்டையே வாங்குவது என்கிற திட்டம் தான் அது. அதன் படி ‘யூத தேசிய நிதி’ (Jewish National Fund) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக அந்த ஆறு ஜெர்மானிய பணக்காரர்களும் தங்கள் பணத்தை கொட்டி இதை உருவாக்கினார்கள். இந்த தகவல் பிற யூதர்களிடம் பரவ அனைத்து யூதர்களும் தங்களால் முடிந்த பணத்தை இந்த யூத தேசிய நிதிக்கு கொடுத்தார்கள். இப்படி மிகப் பெரிய கையிருப்புடன் ‘யூத தேசிய நிதி’ அமைப்பின் மூலம் யூத நில வங்கி பாலஸ்தீனத்தில் தொடங்கப்பட்டது.

சரி இந்த வங்கியின் நோக்கம் தான் என்ன? அதன் ஒரே நோக்கம் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு என்று நிலத்தை வாங்குவது, அப்படி வாங்கப்பட்ட நிலத்தில் யூதர்களை குடியேற்றுவது தான் நோக்கமே தவிர துளி அளவு கூட பணம் சம்பாதிப்பது அல்ல. இந்த திட்டத்தின் படி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நில வங்கிகள் பாலஸ்தீனம் முழுக்க தொடங்கப்பட்டன. அதில் காடாக கிடக்கும் தரிசு நிலத்தை கூட நம்பமுடியாத விலையை கொடுத்து வாங்கினார்கள். பாலஸ்தீனத்தில் வசித்து வந்த அரேபியர்களும் தரிசு நிலத்துக்கு இவ்வளவு தொகையா? என்று அவர்களே முன்வந்து நிலவங்கிகளிடம் தங்கள் நிலத்தை கொடுத்தார்கள்.

இப்போது பாலஸ்தீனத்தின் நிலை பற்றியும் பார்க்க வேண்டும். ஒட்டமான் துருக்கிய பேரரசுக்கு உட்பட்டே பாலஸ்தீனம் இருந்தது. அந்நாட்டின் பெரும்பான்மை நிலங்கள் வறட்சியான பாலைநிலங்கள் தான். கொஞ்ச இடங்களில் மட்டுமே விவசாயம் நடந்து வந்தது. அங்கு வாழ்ந்த அரேபியர்களும் கல்வியறிவு அற்றவர்களாக தான் இருந்திருக்கிறார்கள். அதோடு அங்கு மக்களிடையே செல்வாக்கு பெற்ற தலைவர்களும் இருக்கவில்லை. இது எல்லாம் சேர்ந்து யூதர்களின் திட்டத்துக்கு அவர்களை பலிக்கடாவாக்கி விட்டது.

திடீரென்று இந்த நிலவங்கி ஏன் தோன்றியது? இந்த வெற்றுநிலத்தை வைத்து அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவே இல்லை. கிடைத்த வரை லாபம் என்று தங்கள் நிலத்தை நிலவங்கியிடம் விற்றுக்கொண்டே இருந்தார்கள்.

இதன்பின் நிலவங்கிகள் பாலஸ்தீனியர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கவும் தொடங்கினார்கள். குறைந்த வட்டி தான் என்று இழித்து இழித்து பேசி கடன் கொடுத்தார்கள். பாலஸ்தீனியர்களின் வீடுகளுக்கே சென்று கடன் கொடுத்தார்கள். அதை நம்பிய பாலஸ்தீனியர்களும் வட்டிக்கு கடன் வாங்கினார்கள். ஆனால் நிலவங்கிகள் சொல்லும் வட்டி.குட்டி,கணக்கு எல்லாம், படிக்காத பாலஸ்தீனியர்களுக்கு புரியவே இல்லை. எனவே வாங்கிய கடனுக்கு ஈடாக தங்கள் நிலங்களை நிலவங்கிக்கு தாரைவார்த்தார்கள்.

இப்படி தாங்கள் வாங்கிய நிலங்களுக்கு நடுவில் ஏதும் பாலஸ்தீன மக்களின் நிலம் இருந்தால் அதை அவர்களிடமிருந்து மிரட்டி பிடுங்கவும் தொடங்கின நிலவங்கிகள். இப்படி இரண்டே ஆண்டுகளில் பாலஸ்தீனத்தின் மொத்த பரப்பளவில் நான்கரை சதவீதம் அளவு நிலம் நிலவங்கிகளின் கையில் இருந்தன. இது படிப்படியாக உயர்ந்து 1921 ஆம் ஆண்டில், 25,000 ஏக்கர் நிலம் நில வங்கிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. இது மேலும் உயர்ந்து 1927 வாக்கில் 50,000 ஏக்கர் நிலமாகவும் , 1935 ஆம் ஆண்டின் இறுதியில், 89,500 ஏக்கர் நிலமும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

இப்படி நிலவங்கி வாங்கிய இடங்களில் ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்கள் குடிவைக்கப் பட்டனர். அப்படி வந்த யூதர்களும் தங்களால் முடிந்த வரை தனியாக பாலஸ்தீனியத்தில் இடம் வாங்கத் தொடங்கினர். இதன் பின் முதல் உலக போரின் முடிவில் பிரிட்டன், ஒட்டமான் அரசை வீழ்த்தி பாலஸ்தீனியத்தை கைப்பற்றிக் கொண்டது. இதனால் பிரிட்டன் உதவியுடன் யூத வங்கி இன்னும் வெளிப்படையாகவே நிலங்களை வாங்கிப் போட்டார்கள். அந்த இடங்களில் எல்லாம் யூதர்கள் புதிதாக குடியேறிக்கொண்டே இருந்தார்கள். அப்படி குடியேறிய யூதர்களின் நல்வாழ்வுக்கும் நிலவங்கியே பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆரம்பத்தில் யூத குடியேற்றம் ஆயிரங்களில் மட்டுமே இருந்தது. இதனால் யூதவங்கி வாங்கிப் போட்ட இடங்களில் கூட யூதகுடியேற்றம் மெதுவாகவே நிகழ்ந்தது. ஆனால் இந்த நிலை ஒருவரால் மாறத்தொடங்கியது. ஆம்! அவர் தான் சர்வாதிகாரி ஹிட்லர். அவரின் படைகள் ஐரோப்பாவில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தன. காணும் இடங்களில் எல்லாம் யூதர்களை கொன்று குவித்து கொண்டே சென்றார். கிட்டத்தட்ட ஒட்டு மொத்த ஐரோப்பாவும் அவரின் கிடுக்குப்பிடிக்குள் சிக்கி கொண்டது. என்றே சொல்லலாம். அவரிடம் இருந்து தப்பித்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பாலஸ்தீனியம் நோக்கி வரத் தொடங்கினர். அவர்களுக்கு பாலஸ்தீனியத்தில் யூத நிலவங்கிகள் இடம்வாங்கிப் போட்டு குடிவைக்க இடத்தையும் தயாராக வைத்திருந்தார்கள்.

இந்த நிலவங்கிகள் தொடங்கப்படும் முன்பு பாலஸ்தீனியத்தில் இருபதாயிரம் யூதர்களே இருந்தார்கள். பின் முதல் உலகப்போரின் முடிவில் 80 ஆயிரம் யூதர்களும், இரண்டாம் உலகப்போரின் முடிவில் 6 லட்சத்து 30 ஆயிரம் என்றும் பாலஸ்தீனியத்தில் யூதர்கள் எண்ணிக்கை பெருகியது. அதாவது பாலஸ்தீன மக்கள் தொகையில் 7 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த யூதர்கள் எண்ணிக்கை இப்பொது 34 சதவீதமாக உயர்ந்திருந்தது. இதற்கு எல்லாம் காரணகர்த்தா சந்தேகமே இல்லாமல் யூத நில வங்கி மட்டுமே.

இதன் பின் 1948 இல் ஐ.நா சபை பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து ஒன்றை பாலஸ்தீனியர்களுக்கும் மற்றொன்றை இஸ்ரேல் என்ற பெயரில் யூதர்களுக்கும் கொடுத்தது. இப்படி இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் 54 சதவீத நிலம் இந்த நிலவங்கிக்கு சொந்தமானதாக இருந்திருக்கிறது. பின் இஸ்ரேல் தனி நாடக உயர்ந்த பின் நில வங்கி தான் வைத்திருந்த நிலத்தை அரசிடம் ஒப்படைத்தது. ஆனாலும் நில வங்கியை நடத்தி வந்த ‘யூத தேசிய நிதி’ (Jewish National Fund) என்னும் அமைப்பு இஸ்ரேலின் ‘நில மேம்பாட்டு’ அமைப்பின் பாதி இயக்குனர்களை நியமிக்கும் உரிமையை பெற்றுள்ளது. அது மட்டும் அல்லாமல் 2002 இல் இஸ்ரேலிய அரசு இஸ்ரேல் நாட்டை உருவாக்க போராடிய ‘யூத தேசிய நிதி அமைப்புக்கு’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.

Related Articles

10 Comments

  1. I am not sure where you’re getting your info, but good topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for excellent information I was looking for this information for my mission.

  2. hi!,I like your writing so much! share we communicate more about your post on AOL? I require an expert on this area to solve my problem. Maybe that’s you! Looking forward to see you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button