இந்தியாகேரளா

கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான விபத்து.. 19 பேர் உயிரிழப்பு..

துபாயிலிருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம், நடந்தது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து 174 பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் உட்பட 190 பேருடன் நேற்று பிற்பகல் ஏர் இந்தியா விமானம் ஒன்று கேரளாவிற்கு புறப்பட்டது. அந்த விமானம் கேரள மாநிலம் கரிப்பூர் எனுமிடத்தில் அமைந்துள்ள கோழிக்கோடு விமான நிலையத்தின் வான்பரப்பளவிற்குள் சரியாக 7.40 மணிக்கு வந்தது.

கடுமையான கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சிக்னல் கிடைக்காததால் விமானம் தரையிறங்க முடியாமல் மூன்று முறை வானத்தையே வட்டமடித்தாக கூறப்படுகிறது.

இறுதியாக சிக்னல் கிடைத்தவுடன் அதிவேகத்தில் தறையிறங்கிய விமானம், கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி கொண்டே ஓடுதளத்தின் எல்லையை தாண்டி 36 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் இரண்டு துண்டாக பிளந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 127 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான விபத்து எப்படி நடந்தது, விபத்திற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்திருக்கும் சூழலில் அது தொடர்பான திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. கோழிக்கோடு விமான நிலையம் அமைந்துள்ள கரிப்பூர் எனும் பகுதி பள்ளத்தாக்குகள் மிகுந்த மலைகள் மீது அமைந்துள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்தில் டேபிள் டாப் ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.அதாவது சிறிய மலையின் உச்சியில் விமான ஓடுதளம் இருப்பதைதான் டேபிள்டாப் ஓடுதளம் என அழைக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் விமானங்களின் ஓடுதளத்தின் நீளம் மிக்குறைந்த அளவு கொண்டது என கூறப்படுகிறது. பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலான இந்த விமான ஓடு தளத்தில், பெரிய விமானங்களை தரையிறக்குவது சவால் மிகுந்தது என சொல்லப்படுகிறது. பெரும்பாலான சர்வதேச விமான நிறுவனங்கள் அங்கு விமானங்களை தரையிறக்குவதை ஏற்கனவே நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறிய விமான ஓடுதளத்தில்தான் இந்த கடுமையான மழைக்கு இடையேயும் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டு உள்ளது.

 

ஏற்கனவே ஓடுதளம் மழையால் சேதமடைந்திருந்த நிலையில் விமானம் இறங்கிய வேகத்தில் நிற்காமல் சறுக்கி கொண்டே சென்றுள்ளது. சிறிய ஓடுதளம் என்பதால் எல்லையை தாண்டி 36 அடி பள்ளத்தில் விழுந்து கோர விபத்து நேர்ந்தது. கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுதல்களையும் தாண்டி விமானங்கள் தரையிறக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

விமான நிலைய அதிகாரிகளின் அலட்சிபோக்கினால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏர்இந்தியா விமானத்தை இயக்கிய விமானியான, விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்டாக இருந்தவர். மிகவும் அனுபவம் வாய்ந்த விமானி கவனக்குறைவுடன் விமானத்தை இயக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

 

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட்அலர்ட் விடுத்துள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் சிக்கலான கோழிக்கோடு விமான நிலைய ஓடுதளத்தில் ஏர்இந்தியா விமானத்தை தரையிறக்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button