இந்தியாசெய்திகள்

ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாட்டம்..!

சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சகோதர-சகோதரிகளுக்கு இடையே பாசப்பிணைப்பை போற்றும் வகையில், ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் ரக்ஷா பந்தன் பண்டிகை இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரி தனது சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி கட்டி வாழ்த்து கூறுவது வழக்கம். ராக்கி கட்டியவுடன் சகோதரன், தன் சகோதரிக்கு பரிசு கொடுப்பார்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இத்தினத்தை கொண்டாடுவார்கள். இப்பண்டிகை வட இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளிலும் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை என தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ரக்‌ஷா பந்தன் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும் என்றும், இதனால் அவர்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பண்டிகை அன்பு மற்றும் பாசத்தினால் சகோதர, சகோதரிகளை ஒன்றிணைக்க மீண்டும் உறுதிப்படுத்துகிறது என துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Related Articles

8 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close