கவர் ஸ்டோரிதமிழ்நாடு

காவலர் பணியிட கோரிக்கையில் என்ன பிரச்சனை? முழு தகவல் உள்ளே!

தமிழக அரசு அறிவித்துள்ள 10 ஆயிரம் இடங்களுக்கான காவலர் காலி பணியிடங்களில் முன்பு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு பணிஆணை வழங்க வேண்டும் என்று மாலைமுரசு வெளியிட்ட செய்தியை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதே கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற 8,888 இடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான தேர்வில் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் அதிக மதிப்பெண் பெற்றதன் அடிப்படையில் 8,538 காலிப் பணியிடங்களுக்க காவலர்கள் நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது.

இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 1019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் (சிகரம்’ என்ற பயிற்சி மையத்தில்) படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் வேலூர் மாவட்டத்தில் 236 பேர் மட்டுமே தேர்வானதாகவும், இந்த தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் சீருடை பணியாளர் தேர்வாணையம் கூறி அவர்களுக்கு பணிஆணையும் வழங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் காவலர் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்ட தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார். மேலும் இதற்கான எழுத்துதேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் அறிவித்தார்,

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இது போன்ற சூழ்நிலையில் காவலர் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால் பலர் ஒரே இடத்தில் கூடி கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், அரசின் நிதி நெருக்கடி இன்னும் அதிகமாகிவிடும் என்றும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இதனால் கடந்த 2019 ம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில், தேர்ச்சி பெற்ற 20 ஆயிரம் பேரில் 8,538 பேர் மட்டுமே பணிஆணை பெற்றுள்ளனர். எனவே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேருக்கான பணியிடங்களை இவர்களில் மீதம் இருக்கும் நபர்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மாலைமுரசு முன்பே செய்தி வெளியிட்டு இருந்தது. அதை தொடர்ந்து இப்போது சீமான்,வைகோ, ராமதாஸ், சரத்குமார் போன்ற தலைவர்களும் இது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close