கவர் ஸ்டோரிதமிழ்நாடுராமநாதபுரம்

கொரோனாவால் உயிரிழக்கும் உடல்களை நண்பர்களுடன் கட்டணமின்றி அடக்கம் செய்யும் “இரட்டையர்கள்” – குவியும் பாராட்டு!

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பரவல் வேகம் பிடித்துள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், நாள்தோறும் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. உறவினர்கள் கூட அருகில் வரத் தயங்கும் நிலையில் சில இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் உடலைத் தூக்கி வீசும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடல்களை, அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் பெற்று நல்லடக்கம் செய்யும் பணியில் ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையை சேர்ந்த இரட்டையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், உயிரிழந்தவர்களின் அவரவர் சமய வழக்கப்படி அடக்கம் செய்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று உயர்ந்து வரும் நிலையில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கிழக்கரையை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினர் அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய அச்சப்பட்டுள்ளனர். இதனையறிந்த கீழக்கரையை சேர்ந்த முகமது நசுருதீன் மற்றும் அகமது அசாருதீன் ஆகிய இரட்டையர்கள் அவர்களது நண்பர்கள் 6 பேருடன் இணைந்து இலவசமாக முதியவர் உடலை அடக்கம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்ப வழக்கப்படியும் அவர்களின் மதப் பழக்கவழக்கங்களின் (இந்த,முஸ்லிம்,கிறிஸ்டின்) படியும் இதுவரை 9 உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

இதற்காக இந்த இளைஞர்கள் குழு எந்தக் கட்டணமும் பெற்றுக்கொள்வதில்லை. அவர்களின் இந்த மனிதாபிமான உதவிக்கு பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

இதைப்பற்றி முகமது நஸ்ருதீன் கூறுகையில், “சில இடங்களில் பணம் பெற்றுக்கொண்டு கொரோனாவால் உயிரிழந்த உடல்களை தகனம் செய்கின்றனர். இன்னும் சிலர் பணம் பெற்று கொண்டு உடலை குப்பையில் தூக்கி போடுவது போல் தூக்கி போட்டுவிட்டு செல்கின்றனர். உதாரணமாக, புதுச்சேரியில் கூட பணம் பெற்றுக் கொண்டு அவரது உடலை குப்பையில் தூக்கி போடுவது போல் தூக்கி போட்டுவிட்டு செல்கின்றனர். அந்த மாதிரி இல்லாமல் ஒரு சேவையாகவே நாங்கள் இதனை கட்டணம் இல்லாமல் செய்து வருகிறோம். நாங்கள் இதை ஒரு சேவையாகவே பார்க்கிறோம்” என்றார்.

அகமது அசாருதீன் கூறுகையில், “கீழக்கரையை சேர்ந்த ஏழு உடல்கள், முதுகுளத்தூரை சேர்ந்த ஒருவர் மற்றும் மேலமடையை சேர்ந்த ஒருவர் என இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 9 பேரின் உடல்களை அடக்கம் செய்துள்ளேன். இவர்கள் அனைவருமே அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இது எங்களுக்கு மன நிம்மதியை தருகிறது. ஆனால் எங்களை பார்க்கும் மக்கள் எங்களை தள்ளி வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு சிலர் பாராட்டு தெரிவிக்கின்றனர். என் நண்பர்கள் 20 பேர் இந்த உடல் அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு அடக்கத்திற்கு 6 பேர் செல்வோம்” என்றார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close