தமிழ்நாடு

மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வாஜ்பாயின் பெயரை சூட்ட வேண்டும்- பாஜக கோரிக்கை

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை சூட்ட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகத்திடம், பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சண்முகத்தை, பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் கே.டி.ராகவன், கரு.நாகராஜன், துணைத் தலைவர் எம்.என்.ராஜா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பெயர்களை சூட்டியதை பாஜக வரவேற்பதாகக் கூறினார்.

அதே வேளையில், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய பாடுபட்ட மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரையும் மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தியதாகவும், பாரிமுனை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அம்பேத்கரின் பெயரையும் வைக்கலாம் என கோரிக்கை விடுத்ததாகவும் கே.டி.ராகவன் கூறினார்.

விரைவில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக மீண்டும் வலியுறுத்த உள்ளதாகவும், பிற ரயில் நிலையங்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரை வைக்க வேண்டும் என்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close