உலகம்கவர் ஸ்டோரி

அந்த காலத்தில் நைட்டியாக பயன்பட்ட கைலி – கைலியின் சுவாரஸ்யக் கதை!

கைலிகள் – இதன் பெயர் இரண்டு விதமாக இந்தியாவில் உச்சரிக்கப்படுகிறது, ஒன்று கைலி, அடுத்து லுங்கி. இந்த லுங்கி எனும் சொல்லை தமிழ் சமுதாயம் எடுத்துக்கொள்வதில்லை, குறிப்பாக தென்மாவட்டத்தில் வாழும் மக்கள் கைலி என்றே கூறுகின்றனர்.

இஸ்லாமியர்கள் அதிகம் கைலி பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கைலியின் இருமுனையையும் தைத்து ட்யூப் வடிவில் உடுத்துகின்றனர். இந்தியா முழுக்க இதன் பெயர் லுங்கி தான் என்றாலும் கேரளமும் தமிழகமும் இதற்கு இட்ட பெயர் கைலி.

இந்தோனேசியாவில் முந்தைய காலத்தில் கேரள பெண்கள் கட்டும் முண்டுகளை போல மார்பளவிற்கு தான் கைலி கட்டுவார்கள், அதற்கு பெயர் சரோங் எனப்பட்டது பிறகு நாகரீகம் வளர வளர அதே கைலியில் சட்டையும் தைத்து போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர்.

மலேசிய பெண்களின் தேசிய உடையில் கைலி கெம்பான் எனப்படுகிறது. இந்தியாவை தாண்டி கைலிகள் ஓமன், இலங்கை, பர்மா,பங்களாதேஷ், மலேசியா,இந்தோனேசியா தீவுக்கூட்டங்களிலும் ஆண்களும் பெண்களுமாக அணியப்படுகிறது.

தமிழகத்தை போல பஞ்சாபிய பெண்களும் குர்தாவிற்கு கீழாக கைலி உடுத்துவார்கள் அதற்கு லாச்சா என்று பெயர்.

கைலிகள் இந்தியாவில் மட்டும் தான் பிரபலம் என கூறிவிட முடியாது, இந்தியாவை விடவும் பர்மியர்களுக்குத்தான் கைலி தேசிய உடையாகிறது. அவர்களில் ஆண்/பெண் இருபாலரும் கைலி உடுத்துவார்கள். ஆண் கைலி ,பெண் கைலி என அதில் வித்தியாசங்கள் பெரிதாக இருக்காது.

ஆனால் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் சில முஸ்லிம் ஊர்களில் பெண்கள் கைலி உடுத்துவார்கள், அவை பிரத்யேகமாக பெண்களுக்காகவே பூக்கள் போட்டு தயாரிக்கப்பட்டதாக இருக்கும். மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இவர்களுக்கான பெண்கள் கைலிகள் தயாராகி வருகின்றன. பின்னாளில் இந்தியாவிலும் மலேசிய கைலிகளை போல பெண்களுக்கான ரெப்ளிக்கா கைலிகள் தயாரிக்கப்பட்ட போதும் அவை பெரிதாக எடுபடவில்லை.

நேரடியாக சிங்கப்பூர்-மலேய போக்குவரத்து தொடர்பில் இருந்தவர்களுக்கு எளிதாக கிடைத்த பெண் கைலிகள், போக்குவரத்தில் போகாதவர்களுக்கு சென்னையின் பர்மா பஜாரில் அவை இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும். கீழை நாடுகளில் வியாபாரத்திற்கு போகுறவர்களிடம் வயதான பாட்டிகள் விரும்பி கேட்கும் இரண்டு பொருட்களின் ஒன்று கோடாலி சாப் தைலம், அடுத்து இந்த கைலிகள். ஆண் உடுத்தும் கைலியை போல சாதாரணமாக இல்லாமல் அவை கொஞ்சம் பளபளப்பாக பாலீஷாக இருக்கும்.

அதன் உழைப்பும் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு இருக்கும். சீக்கிரத்தில் கிழியாது இத்துப்போகாது, சோப்புத்தண்ணீரில் துவைத்து வைப்பதால் நிறம் மட்டும் கொஞ்சம் மங்கிப்போகும். அதையும் கூட பெண்கள் விடாமல் , வீட்டில் யாருக்கும் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு பீத்துணி மூத்திரத்துணியாக உபயோகிக்க சேமித்து வைப்பர்.

பிறந்த குழந்தைகளின் தாய்ப்படுக்கை பாட்டிகளின் கைலித்துணிகளால் தயாரானவையே.
எனக்கு தெரிந்து இளையான்குடி, சாலையூர், புதூர்,சோதுகுடி,சாத்தனி, காடடர்ந்தகுடி போன்ற ஊர்களை சேர்ந்த எல்லா பிராயஞ்சென்ற பெண்களையும் இந்த கைலி சட்டை தாவணியுடன் தான் காண முடியும்.

அந்த மேலாப்பில் அணியும் தாவணியும் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல் தான், குறிப்பாக மஞ்சள் நிறத்திலான பிறை போட்ட தாவணிகளும், பச்சைப்பூக்கள் போட்ட வெள்ளைத்தாவணிகளும் உடுத்தாத பெண்களே இல்லை எனலாம், பல நிறத்திலும் பல வகை பூக்களும் போட்ட பருத்தி தாவணிகள் நெய்து வந்தாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு டேஸ்ட் உண்டு.
தமிழக முஸ்லிம் கிராமங்களில் வேறு எங்கு இப்படியான தனித்துவ ஆடை கலாச்சாரம் நிலவுகிறது என தெரியவில்லை.

எங்களது சிறு வயது முதல் ஒரு 45 வயதினை கடந்த அனைத்து பெண்களும் கைலி தாவணியில் பார்த்தே பழக்கப்பட்டிருக்கிறோம் . பாட்டிகளின் கைலிகள் குழந்தைகளுக்கு படுக்கைத்துணி ஆவது போல அவர்களது தாவணிகள் மகள் பிள்ளை, பேத்தி பிள்ளைகளுக்கு தொட்டில் துணியாகிறது.

எங்களது குழந்தைகள் கூட பாட்டிகளின் தாவணியில் தூளிகட்டி ஆடியவர்கள் தான். சேலைகளில் தொட்டில் கட்டுவதை அவர்கள் விரும்புவதில்லை, கணவனை இழந்த பாட்டிகளின் வெந்நிற தாவணிகளுக்கே தொட்டில்த்துணியாக முன்னுரிமை., இதில் சோனகவீட்டுப்பெண்களும் கொடிக்காவீட்டு பெண்களும் பெரும்பாலும் இந்த கைலி சட்டை தாவணி உடையை அணிவதை தவிர்த்துவிடுவர். சோழமண்டல கடற்கரையை ஒட்டிய முஸ்லிம் கிராமங்களில் இந்த கைலி தாவணி உடை கலாச்சாரம் காணப்படுகிறதா என தெரியவில்லை, மாவட்டத்தின் உட்பகுதிகளில் தான் இது காணப்படுகிறது.

திருமணமாக போகும் பெண்களுக்கு 20-30 சேலைகளுடன் ஒரே ஒரு செட் கைலி – தாவணி கொடுப்பதும் சீர்வரிசையில் இடம்பிடிக்கும் , வெயில்கால புழுக்கத்தில் இருந்து தப்பிக்க இளம் வயது பெண்களும் சிலநேரம் இரவுகளில் கைலி தாவணி உடுத்துவார்கள். அது தான் அப்போதைய மேக்ஸியாக (நைட்டி) இருந்தது எனலாம்.

சென்னைக்கு குடிபெயர்ந்து சுமார் நாற்பது ஆண்டுகள் ஆன பிறகும் கூட என் அம்மா நைட்டி எடுத்து உடுத்தியது கிடையாது, அதல்லாம் எனக்கு மட்டும் தான். நைட்டியோடு வீட்டில் சுற்றுவதை இன்னும் கூட எங்கம்மா கண்டிப்பார். இப்போது இளம்பெண்கள் கைலி தாவணி அணிவது வழக்கொழிந்துவிட்டது. பாட்டிகள் தான் கைலி உடுத்துவார்கள் என்ற எண்ணம் மனதில் புதைக்கப்பட்டுவிட்டது.

பெரும்பாலும் பாட்டிகளுக்கு இந்தோனேசியா கைலிகள் விருப்பத்திற்குள்ளானதாக இருப்பதில்லை மாறாக சிங்கப்பூர் ஹனிபாவில் வாங்கி வந்த கைலி என்றால் அதில் ஒரு பெருமையும் உடுத்துவதில் ஒரு பெருமிதமும் உண்டு. அவை தரமானவை என்ற கண்ணோட்டம் தான் வேறென்ன. அப்பா வாங்கித்தரும் கைலியை வாங்கி அதில் எந்த நாட்டு விலாசம் கிடக்கிறது பார் என பேத்தி,பேரன்களிடம் கொடுத்து சரிபார்க்க சொல்வதில் பாட்டிகளுக்கு நிகர் பாட்டிகளே…

தமிழக முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு பொருளிலும் பிராண்டட் ஐட்டங்களை வாங்குவதிலும் உபயோகிப்பதிலும் ஒருவித அலாதி விருப்பம்.
மலேசிய, சிங்கப்பூர் தயாரிப்பிற்கும் இந்தோனேசியா கைலி தயாரிப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம் யாதெனில் அடர்நிற பச்சை,ஊதா,சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களில் பெரிய பெரிய இலை மற்றும் பூக்களோடு பாலிஷாக இருக்கும். இந்தோனேசியா கைலி என்பது வெளிர் நிறத்தில் அரக்கு,மஞ்சள் ,ரோஸ் நிறங்களில் பெரியதும் சிறியதுமாக பூக்கள் குறைவாகவும் கொடிகள் கூடூதலாகவும் பளபளப்பு குறைவாகவும் இருக்கும்.

தென்தமிழகத்தில் ராமநாதபுரம் போல கேரளத்திலும் முஸ்லிம் பெண்கள் கைலி உடுத்துவதை காணமுடியும். முஸ்லிம் பெண்களுக்கு இணையாக மற்ற பெண்களும் கைலிகளை அணியவே செய்வர் எனினும் மலப்புரம் போன்ற முஸ்லிம்கள் நிறைந்த மாவாட்டத்தில் பெண்களும் ஆண்களை போல வெள்ளைக்கைலி உடுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இப்போதும் வயது மூத்த பெண்கள் வெந்நிற கைலிகள் உடுத்துவார்கள்.
பர்மா,மலேயா,இந்தோனேசியா,இந்தியாவில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பிராந்தியமும் கேரளத்தின் மேற்கு கடற்கரை பிராந்தியமும் கைலி உடுத்தும் பெண்கள் நிறைந்த பகுதிகளாக அறியப்படுகிறது.

தஞ்சை மற்றும் தூத்துக்குடி பெண்கள் பருத்திச்சேலைக்கு மேலாக துப்பட்டி அணியும் பழக்கமுடையவர்களாக இருந்தனர் அது அவர்களது ஹிஜாப்+புர்காவாக அறியப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் புர்கா என்பது சமீபத்தில் வழக்கத்தில் வந்த ஒன்றாகவே உள்ளது.

நன்றி: S. Nasrath Rosy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close