ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளி நூற்றாண்டு விழா: ‘மன தைரியத்துடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்’! மாணவர்களுக்கு நடிகர் விக்ரம் அறிவுறுத்தல்!!

211

ஏற்காடு, ஜூலை.24¬–
‘மன தைரியத்துடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்’ என ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளி நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கு நடிகர் விக்ரம் அறிவுரை கூறினார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் மற்றும் 100–வது விளையாட்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
2–வது நாளான நேற்று மாண்ட்போர்ட் பள்ளியில் தற்போது 3–வது வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படித்து வரும் மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு மாண்ட்போர்ட் சபை உலக துணைத்தலைவர் அருட்சகோதரர் கே.எம்.ஜோசப் தலைமை தாங்கினார். ஏற்காடு சபை தலைவர் அருட்சகோதரர் டாக்டர் பி.ஜே.ஜார்ஜ், மாண்ட்போர்ட் பள்ளி முதல்வர் கே.ஜே.வர்கீஸ், பள்ளி இயக்குனர் அருட்சகோதரர் அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவரான நடிகர் விக்ரம் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவ–மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை நடிகர் விக்ரம் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களான அன்புமணி ராமதாஸ் எம்.பி., கோட்டயம் தொகுதியை சேர்ந்த ஜோஸ்கேன்மணி எம்.பி., பிரபல இந்திப்பட இயக்குனர் நாகேஷ் குக்கூனூர் மற்றும் தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் கே.ஆர்.அய்யப்பமணி, மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணவ–மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சி நடந்தது. 3–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை உள்ள மாணவ–மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அசத்தினர். குறிப்பாக பிளஸ்–2 மாணவர்கள் நடிகர் விக்ரம் நடித்த படத்தின் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி வியக்க வைத்தனர். அதை நடிகர் விக்ரம் உள்பட பார்வையாளர்கள் கை தட்டி ரசித்து பார்த்தனர்.
தொடர்ந்து குதிரையேற்ற வீரர்கள் குதிரையுடன் சாகச நிகழ்ச்சி நடத்தி காண்பித்தனர். அதன் பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கும், கலைநிகழ்ச்சி, ஒழுக்கம், அணிவகுப்பு, ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றவர்களுக்கும் நடிகர் விக்ரம் பரிசுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
இதுபோன்ற ஒரு கலைநிகழ்ச்சியை நான் இதுவரை கண்டதில்லை. குறிப்பாக, என்னைவிட மாணவர்கள் சிறப்பாக நடனமாடினார்கள். ஆனால், இதை நான் வெளியே சொல்லமாட்டேன். இங்கு படித்த பலர் விளையாட்டு போட்டிகளில் தேசிய மற்றும் உலக அளவில் வெற்றி பெற்று பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் இங்கு படித்த மாணவர்கள் பரவி உள்ளனர்.
எனக்கு மூன்று பெயர் உண்டு. உண்மையான பெயர் கென்னடி ஜான்விக்டர். எல்லோரும் ‘கென்னி‘ என்று அழைப்பர். பின்னர் சினிமாவில் நுழைந்ததும் ‘சீயான் விக்ரம்‘ என்று மாறி விட்டது. எல்லோருக்கும் டாக்டராக வேண்டும், என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த கனவுகளை நிறைவேற்ற துரத்தி செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த துறையில் சாதிக்க முடியும். நானும் அப்படித்தான் இருந்தேன். மாணவ பருவத்திலேயே விளையாட்டு, படிப்பு, நடிப்பு என சகலகலா வல்லவனாகவே இருந்தேன். 9–ம் வகுப்பு படிக்கும்போது நாடகங்களில் நடித்தேன்.
எனக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, 23 இடங்களில் ஆபரேசன் செய்யப்பட்டது. டாக்டர்கள் என்னை இனி எழுந்து நடக்க முடியாது என்று கூறி விட்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நோயாளிபோலவே இருந்தேன். பின்னர் மனதைரியத்துடன் முயற்சி செய்து நடக்க தொடங்கினேன். சாதித்தேன். எனவே, மாணவர்களாகிய நீங்களும் மன தைரியத்துடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.