யாழ்ப்பாணப் பல்கலை.யில் தமிழ்–சிங்கள மாணவர்கள் மோதல்!

271

கொழும்பு, ஜூலை.18–
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கிடையே மோதல் மூண்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது சிங்கள கலாசாரப்படி கண்டிய நடனத்துடன் முதலாண்டு மாணவர்களை சிங்கள மாணவர்கள் வரவேற்றனர். இதற்கு, தமிழ் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கிடையே மோதல் மூண்டது.
இச்சம்பவத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் ஆறு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். யாழ்ப்பாணம் பல்கலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இரு பிரிவு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணப்பல்கலை.யின் அறிவியல் துறை ஒரு வார காலத்துக்கு மூடப்படுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது.