ரூ. 100 கோடி மதிப்பிலான பாம்பு விஷம் பறிமுதல் : சீனாவுக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது.

317

மேற்கு வங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை கடத்த முயன்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் பாராசாத் என்ற பகுதியில் பாதுகாப்புப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக சென்ற கார் ஒன்றை அவர்கள் விரட்டி சென்று பிடித்தனர். இதையடுத்து, காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அப்போது, காரை சோதனை செய்ததில் மூன்று கண்ணாடி ஜாடிகளில் பாம்பு விஷம் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த பாதுகாப்புப்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், வங்கதேசம் வழியாக சீனாவுக்கு பாம்பு விஷத்தை கடத்த முயன்றதாக அவர்கள் கூறினார். கைப்பற்றப்பட்ட பாம்பு விஷத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 கோடி ரூபாய் இருக்கும் என பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.