காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

247

கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர் ஒகேனக்கல் வந்தடைந்தது. காவிரி நீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்ததையடுத்து, கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நல்ல மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபிணி, கே.ஆர்.எஸ். அணைக்ள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தற்போது, ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வந்தது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பிலிகுண்டுலு, ஒகேனக்கல், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப்பயணிகளை அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மூன்று நாளில் மேட்டூர் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்பதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு தாமதமின்றி தண்ணீர் திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.