வைகை அணையில் இருந்து 3 ஆயிரத்து 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், 71 அடி நீர் மட்டம் கொண்ட வைகை அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. வினாடிக்கு 3 ஆயிரத்து 695 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து 3 ஆயிரத்து 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாசன வசதிக்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், மக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.