நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி, பூத் ஏஜெண்ட் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார். இந்தநிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

இதன் இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படுவதற்கு முன்னதாக வரும் செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7, 14 ஆகிய தேதிகளின் சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்து 72 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.