விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரைடப்பால் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவம் தொடர் கதையாக மாறிவிட்டது.

248

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரைடப்பால் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவம் தொடர் கதையாக மாறிவிட்டது.

சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அருகே உள்ள தென்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரது மனைவி சுசீலா. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிர் செய்திருந்தார். போதிய நீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால், மனமுடைந்த சுசீலா விஷம் குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுசீலா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல்,திருவாரூர் மாவட்டம் கேட்டூர் அருகே உள்ள வெங்கத்தாங்குடியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கடன் பெற்று சம்பா சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே சிறுபத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த துரைராஜ் என்ற விவசாயி 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மக்காசோளம், துவரை பயிரிட்டுள்ளார். ஆனால் எந்த வருவாயும் கிடைக்காத நிலையில், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகமானதால் துரைராஜ் கடந்த சில நாட்களாக மன நெருக்கடியில் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தஞ்சையில் வறட்சி குறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு செய்ய இருந்த நிலையில் 2 விவசாயிகள் திடீரென வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் திருமலை சமூத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சசிகுமார் தண்ணீரின்றி பயிர் கருகியதால் வயலுக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையத்து அவர் உடனடியாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார்.

இதே போல் தஞ்சை மாவட்டம் ஆலக்குடியை சேர்ந்த 32 வயதுடைய விவசாயி முருகானந்தம் 4 ஏக்கரில் பயிர் செய்த சம்பா பயிர் கருகியதால் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள லட்சுமி நாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற விவசாயி, கடன் வாங்கி மக்கா சோளப்பயிர்களை பயிரிட்டுள்ளார்.. ஆனால் தண்ணீரின்றி பயிர்கள் அனைத்தும் கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார்.