ரயிலில் வங்கிப்பணம் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக விருத்தாச்சலம் பகுதியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

333

ரயிலில் வங்கிப்பணம் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக விருத்தாச்சலம் பகுதியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ஐந்தே முக்கால் கோடி ரூபாய் வங்கிப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் பல்வேறு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், கொள்ளை தொடர்பாக இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. இந்நிலையில், கொள்ளை குறித்து சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நேற்று விளக்கம் கேட்டனர். ரயிலில் இருந்த வங்கிப்பணத்தை எடுத்துச்செல்வதற்கு ஏற்பட்ட தாமதம் குறித்து அவர்கள் விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று, சேத்துப்பட்டில் ரோந்து பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள், எழும்பூர் பார்சல் பிரிவு ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கொள்ளை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விருத்தாச்சலம் சுற்று வட்டாரப்பகுதிகளில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணையின் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.