சென்னை மாநகரப் பேருந்தில் பட்டா கத்தியை சாலையில் உரசியபடி பயணம் செய்த மாணவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொள்வதும், பேருந்திலேயே பயங்கர ஆயுதங்களை சுமந்தபடி பயணம் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம்கூட சென்னை மாநகர பேருந்துகளில் கத்தி, கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரகளை செய்த நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காவல் துறையிடம் சிக்கினர். இவ்வாறு பேருந்தில் மட்டுமல்ல… சென்னை புறநகரில் ஓடும் ரயிலிலேயே கத்தி, பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ஒட்டு மொத்த பெற்றோரையும் உறங்க விடாமல் செய்தனர்.

அவர்கள் மீது காவல் துறையினரும் நடவடிக்கை எடுத்தனர். என்றாலும் மாணவர்கள் தங்களின் விபரீதமான ஹீரோயிசத்தை நிறுத்திக் கொள்வதாயில்லை. இதோ இன்றும் மாநகரப் பேருந்தில், பட்டா கத்தியை சாலையில் தீப்பொறி பறக்க உரசியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களின் வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புத்தியைத் தீட்டாமல் கத்தியைத் தீட்டும் கல்லூரி மாணவர்களின் சேட்டையால் கதிகலங்கிப் போன பேருந்துப் பயணிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் பேருந்தில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது அவர்களில் சிலரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.