விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது..!

401

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள விநாயகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த, முந்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி, இன்று அதிகாலையில் பல்வேறு அபிஷேகமும், சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர்.

சென்னை தி.நகரில் புளிப்பு மிட்டாயால் ஆன விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. 7 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட, இந்த சிலை 450 கிலோ மிட்டாய்களால் செய்யப்பட்டுள்ளது.

கடலூரில் தர்பூசணியில் பால கணபதி, துந்தி கணபதி உள்ளிட்ட 32 கணபதிகளை வர்ண பூச்சு இல்லாமல் செதுக்கி, விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து தீபாராதனை செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில், செங்கோல் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர். அனைத்து விதமான விதைகளைக்கொண்டு 6,300 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் இவற்றை வைப்பதால், விதைகள் மரங்களாக வளர்ந்து பயன்தரும் என்றும் மாணவர்கள் கூறினர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர்.