விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்தியமங்கலம் அருகே 4 மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 5 ஆயிரம் சிலைகளுக்கு வர்ணங்கள் பூசும் பணி துவங்கியுள்ளது.

243

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்தியமங்கலம் அருகே 4 மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 5 ஆயிரம் சிலைகளுக்கு வர்ணங்கள் பூசும் பணி துவங்கியுள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அருகே பெரியகள்ளிப்பட்டி பகுதியில் சிலைகளுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மயில் வாகனம், பசுவாகனம், சிங்கம், அன்னம், முருகன், மூன்றுமுக விநாயகர், மங்கள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மூன்றரை அடி முதல் 11 அடி வரை உள்ள 5 ஆயிரம் சிலைகளுக்கு சூற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் காகிதக்கூழ், கிழங்குமாவு, வாட்டர்கலர் பயன்படுத்தி வர்ணம் பூசப்படுகிறது. இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது எளிதில் கரையும் வகையிலும், நீர்மாசு ஏற்படாத வகையிலும், நீரில் வசிக்கும் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியிலும், அடுத்த மாத துவக்கத்திலும் இந்த சிலைகள் ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள இந்துமுன்னணி கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.