ஊராட்சி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை : கணக்கில் வராதா 14,600 ரூபாய் பறிமுதல்

92

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி ஊராட்சி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது கணக்கில் வராத 14 ஆயிரத்து 600 ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது.

ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகங்கள் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 2 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த இரு ஊராட்சிகளுக்கு உதவி இயக்குனராக துரைசாமியும், முத்தழகுவும் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊராட்சிளில் பணிபுரிந்து வரும் உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள், தணிக்கை தடையை நீக்குவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு விழுப்புரம் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத 14 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வீட்டுமனையை பதிவு செய்வதற்கு அங்குள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது சார்பதிவாளர் பொன்பாண்டியன் லஞ்சம் கேட்டதாக அவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினடம் அவர் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புதுறையினர் கொடுத்த ரசாயணம் தடவிய பணத்தை சார்பதிவாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்தனர்.