அதிமுக அரசுக்கு மகளிர் உறுதுணையாக இருக்க வேண்டும் – அமைச்சர் சி.வி. சண்முகம்

98

யாருடைய உதவியும் இல்லாமல், மகளிர் சொந்த உழைப்பில் வாழ்வதற்கு அதிமுக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டு, ஒரு கோடியே இருபது லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை 450 மகளிருக்கு வழங்கினார். அப்போது பேசிய அவர், வாகனங்களைப் பெற்ற அனைவரும் கட்டாயமாக வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். சமுதாயத்தில் பெண்கள், ஆண்களுக்கு நிகராக செயல்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம், பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும் அதிமுக அரசுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.