விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட இறால் பண்ணைகள் அகற்றப்பட்டுள்ளது

239

மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட அமந்தை காளியாங்குப்பம் ஆத்திகுப்பம், வட அகரம், கோட்டிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான சுமார் 12 ஆயிரம் ஏக்கர் சதுப்பு நிலபரப்புள்ளது. இந்த அரசின் நிலபரப்பினை ஒரு சிலர் ஆக்ரமிப்பு செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அமைத்துள்ளனர். இந்த இறால் பண்ணைகளால் அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடி நீர் பாதிக்கப் படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து பல போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையொட்டி மரக்காணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை இடித்து தள்ள மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரமானதால் காலக்கெடு கேட்டதின் காரணமாக இது ஒத்தி வைக்கபட்டது. இந்த நிலையில் இறால் பண்ணைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் பேரில் மரக்காணம் வட்டாட்சியர் தலைமையில் திண்டிவனம் மாவட்ட துணை ஆட்சியரின் மேற்பார்வையில் வனத்துறையினர் மற்றும் மின்சார வாரியம் காவல்துறையினரின் உதவியோடு அனுமதி பெறாத இறால் பண்ணைகள் ஒரு சில இறால் பண்ணைகளை இடித்தனர். இதனை தொடர்ந்து மற்ற இறால் பண்ணைகளும் இடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.