விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..!

130

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுக்கொண்டு லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இந்தியா தொடர்ந்த வழக்கில், இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவில், அரசியல் ரீதியாக தன் பழிவாங்கப்படுவதாகவும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என உத்தரவிட்டது. 3 நாட்கள் விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.