விஜய் மல்லையா கடன் பெற்ற விவகாரத்தில் காங்கிரஸ் உதவி காங்கிரஸ் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு !

181

விஜய் மல்லையா வங்கி கடன் விவகாரத்தில், மன்மோகன் சிங், மற்றும் சிதம்பரம் ஆகியோர் அவருக்கு உதவி செய்ததாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிக் கடன் பெறுவதற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் உதவி செய்தனர் என்று குற்றம்சாட்டினார். வங்கிகளிடம் கடன் பெறுவது தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விஜய் மல்லையா பல கடிதங்களை எழுதியிருந்ததாகவும், ஒரு கடிதத்தில் வங்கி கடன் வழங்கும் நடைமுறையில் தான் மிகவும் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்ததாக மல்லையா குறிப்பிட்டிருந்ததாக, அவரது கடிதங்களை சுட்டிகாட்டி சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். இதேபோல, அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் மல்லையா கடிதம் எழுதினார் என்றும், அந்தக் கடிதத்தில், பாரத ஸ்டேட் வங்கியிடம் ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழ் வாங்கி தரும்படி கேட்டிருந்ததாகவும் பத்ரா தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் இந்த குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்போது தொழில் துறையைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது வழக்கமான நடைமுறை என்றும், சட்டத்துக்குப் புறம்பாக தான் எதையும் செய்யவில்லை என்றும், மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற கருத்தைத் தெரிவித்த ப.சிதம்பரம், மத்திய அரசுக்கு வரும் ஒவ்வொரு கடிதங்களையும் அமைச்சர்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும், அவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதே நடைமுறை என்றும் தெரிவித்துள்ளார்.