இங்கிலாந்தில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை !

234

இங்கிலாந்தில் இருக்கும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிகளிடம் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனை திருப்பி செலுத்தாமல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். நாடு திரும்பி தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு அவர் மறுத்து விட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சொத்து விவரங்களை விஜய் மல்லையா தாக்கல் செய்யாததற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். எனவே, அவர் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.