கருணாநிதி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பு..!

282

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து 5 வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல் நலம் சீரடைந்ததால், அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் பின் லண்டன் மருத்துவரை வைத்து வீட்டிலேயே கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க ஸ்டாலினும், மு.க.அழகிரியும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

அப்போது கருணாநிதி உடல் நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் குடும்பத்தாரிடம் அவர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் காவேரி மருத்துவமனை வந்து, கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தார். அவருடன் என்.எஸ்.வி சித்தன், கோவை தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்திருந்தனர். இதே போல் தமிழ்நாடு கிறிஸ்தவ கத்தோலிக்க சபை சார்பில் ஜார்ஜ் அந்தோணி காவேரி மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதி நலம் குறித்து விசாரித்தார்.