துணை ஜனாதிபதி – வெங்கய்யா நாயுடு குறித்து ஒரு செய்தித் தொகுப்பு….!

245

முப்பாவரப்பு வெங்கய்யா நாயுடு 1949ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சவடலபாளையம் கிராமத்தில் பிறந்தவர்.
சட்டம் பயின்ற அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றியதோடு, 1972ம் ஆண்டு ஜெய் ஆந்திரா போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
விவசாயிகள், பின்தங்கிய மக்களின் நலனுக்கு குரல் கொடுத்து வந்த வெங்கய்யா நாயுடு, 1978ம் ஆண்டு எம்எல்ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதன்மூலம் அரசியல் அரங்கில் பிரபலமான அவர், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவானார். 1998ம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு வெங்கய்யா நாயுடு தேர்ந்து எடுக்கப்பட்டார். பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளராக 1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். தென்னிந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியை சரளமாக பேசக் கூடிய வெங்கய்யா நாயுடு, பாஜக பிரச்சாரங்கள் மூலம் வட மாநில மக்களை ஈர்த்தார்.
1999ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்தவுடன், மத்திய அமைச்சரானார். பின்னர் பாஜகவின் தேசிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட அவர், கட்சியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக வெங்கைய்யா பொறுப்பேற்றார். பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும், வெங்கய்யா நாயுடு, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான குடியரசு துணைத் தலைவர் பதவியை அலங்கரிக்கும் அவர், தனது சிறப்பான செயலாற்றல் மூலம் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை.