வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாமில் தங்க வைப்பு : நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

638

வால்பாறையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைத்துள்ள மக்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், போர்வைகளையும் வழங்கினார். மேலும், வெள்ளம் பாதித்த அரசு போக்குவரத்து பணிமனை, வாழைத்தோட்டம் மற்றும் ஆறு பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

வீடு இழந்தவர்களுக்கு விரைவில் புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதனிடையே, மேட்டூர் அணையில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக, கரூர் மாவட்டம் மாயனூர் அருகே பயிரிடப்பட்ட வாழை, கொய்யா, மரவள்ளி கிழங்கு, சோளம் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.