4-வது நாளாக நீடிக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் !

234

4-வது நாளாக நடைபெறும் லாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆங்காங்கே முடங்கியுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் கடந்த 30-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லாரிகள் ஓடாததால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன் அவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக, தென்மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் இடையே ஐதராபாத்தில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்பட வாய்ப்பு உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.