புதுவை, சென்னையில் வருமான வரி வேட்டை கல்லூரிகளில் ரூ.100 கோடி பறிமுதல்! பட அதிபர் மதன் விவகாரத்தால் புதிய திருப்பம்!!

161

புதுவை, சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய வேட்டை காரணமாக ரூ.100 கோடி சிக்கியுள்ளது. நேற்று முதல் இன்று காலை வரை விடிய விடிய பணத்தை எண்ணி வருகிறார்கள். காணாமல் போன பட அதிபர் மதன் விவகாரத்தால் இந்த பணம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
சென்னையை சேர்ந்த பிரபல ஆடிட்டிங் நிறுவனமான எஸ்.எச். பண்டாரி அன் கோ மற்றும் அதன் உரிமையாளர் ஸ்ரேயான்ஸ் பண்டாரி மீது புகார் எழுந்ததையடுத்து கடந்த 2015–ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இவர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரி சலோங் ஏடன் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டு
ஆடிட்டிங் நிறுவனத்திற்கு சாதகமாக அறிக்கை அளிக்க இவர் பெருமளவு தொகையை லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட சலோங் ஏடன் மட்டுமின்றி கூடுதலாக வருமான வரித்துறையின் அதிகாரிகள் 9 பேருக்கு தொடர்பு இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்தனர்.
புதுடெல்லியை சேர்ந்த முதன்மை செயலாளர் எஸ்.கே. மித்தல், தமிழகத்தை சேர்ந்த கூடுதல் கமிஷனர் டி.என்.பிரகாஷ், பெங்களூரை சேர்ந்த துணை கமிஷனர் ஆர்.வி. ஹரூண் பிரசாத், சென்னையை சேர்ந்த துணை கமிஷனர் எஸ்.முரளிமோகன், சென்னை சேர்ந்த கமிஷனர் விஜயலட்சுமி, மும்பையை சேர்ந்த கூடுதல் கமிஷனர் எஸ்.பாண்டியன், மும்பையை சேர்ந்த கமிஷனர் ஜி. லட்சுமி பர பிரசாத், காசியாபாத்தை சேர்ந்த கூடுதல் இயக்குனர் ஜெனரல் விக்ரம் கவுர், மும்பையை சேர்ந்த கூடுதல் இயக்குனர் ராஜேந்திர குமார் ஆகிய 9 பேர் தான் ஊழலில் சிக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவர்.
பறிமுதல்
இவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் இருக்கும் 22 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் மற்றும் டெல்லியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 80 கோடி ரொக்க பணம் மற்றும் சொத்து ஆவணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த அதிகாரிகளின் வங்கி லாக்கர்களில் இருந்து 4.28 கிலோ தங்கம் மற்றும் 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 லாக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருக்கும் பொருட்கள் குறித்து கணக்கிடப்படவில்லை.
ஆடிட்டர் பண்டாரி அன் கோ நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட இந்த அதிகாரிகள் பெருமளவு பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர். அத்துடன் ஆடிட்டரின் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். 5 நட்சத்திர ஓட்டல்களில் கும்மாளம் அடித்துள்ளனர். நினைத்த இடங்களுக்கு விமானத்தில் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
குடும்பத்துடன் வெளிநாட்டு பயணங்களும் சென்று திரும்பி உள்ளனர். இப்படி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த 9 அதிகாரிகளும் ஆட்டம் போட்டுள்ளனர். இவர்களை ரகசியமாக கண்காணித்து வந்த சி.பி.ஐ. தற்போது மிகவும் துல்லியமாக திட்டம் போட்டு வளைத்து பிடித்துள்ளது.
இதன் காரணமாக வருமானவரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சோதனை
சமீபத்தில் சென்னையில் எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு நெருக்கமாக செயல்பட்ட பட அதிபர் மதன் திடீரென காணாமல் போனார். அவர் எழுதியதாக கூறப்படும் சில கடிதங்கள் வெளியாகின. அந்த கடிதங்களில் தன்னிடம் மருத்துவக் கல்லூரி சீட் வாங்க வசூலித்த பணம் இருப்பதாக கூறியிருந்தார். இதில் புதுவையைச் சேர்ந்த மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரியில் மாணவர்களை சேர்க்க பணம் வாங்கியது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மதன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை தேடி வருகிறார்கள். அதே சமயம் அவர் கடிதத்தில் வெளியான தகவலை வைத்து வருமானவரித்துறை நேற்று திடீரென புதுவை மற்றும் சென்னையில் சத்தியசாய் குழும கல்லூரிகளில் சோதனை நடத்தினார்கள். புதுவையில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரியில் சோதனை நடந்தது.

இந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய இடம் பெறுகிறது.
அதாவது எஸ்.ஆர்.எம். குழும கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துவிடுவதற்காக மதன் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தார்.
இந்த கல்லூரியை ஸ்ரீ பாலாஜி கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறது. இதனால் அந்த கல்லூரிகளில் சோதனை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்து களமிறங்கியது. இதன்படி சுமார் 40 அதிகாரிகள் கொண்ட குழுவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். முதலில் பெரியளவில் பணம் சிக்கவில்லை. கல்லூரியின் செய்தி தொடர்பாளர் ஜெரால்டு என்பவருக்கு சொந்தமான அரியாங்குப்பம் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் மலைத்து போனார்கள். அந்தளவுக்கு அங்கு கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றை அப்படியே அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணம் எண்ணும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணத்தை கணக்கிடும் பணி நடந்தது.
நேற்று தொடங்கிய பணி இன்று காலை வரை விடிய விடிய நடந்தது. இந்த கல்லூரி தொடர்பாக மட்டும் 80 கோடிக்கு மேல் பணம் சிக்கியுள்ளது. இதுதவிர ஆவணங்களையும் சேர்த்தால் மொத்த மதிப்பு ரூ.100 கோடியைதாண்டும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
விசாரணை
இந்த பணம் பறிமுதலுக்கும் சென்னையை சேர்ந்த ஆடிட்டர் பண்டாரி அன்கோ நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு என்ற விவரங்களை திரட்டி வருகிறார்கள்.
இதே போன்று புதுச்சேரியில் பாலாஜி அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகளில் கைப்பற்றப்பட்டுள்ள பணம் குறித்தும் தனியாக விசாரணை நடைபெறும். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை மறைக்க மேற்கண்ட அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் பெற்றார்கள்? அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பது பற்றிய விவரங்கள் அடுத்த கட்ட விசாரணையில் அம்பலமாகும்.
சி.பி.ஐ. இதுவரை இல்லாத அளவுக்கு நடத்தி உள்ள இந்த மெகா சோதனையில் வருமான வரித்துறையில் மிக முக்கிய பொறுப்புகள் வகித்த அதிகாரிகள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து மேலும் பல அதிகாரிகள் விசாரணை வளையத்தில் சிக்க கூடும் என தெரிகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு தான் மேற்கண்ட ஊழல் அதிகாரிகள் எங்கெங்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்கள் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்று வருமானவரித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளும், வருமானவரித்துறை அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்த வேட்டையை நடத்தியுள்ளனர்.