வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வரும் 23-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

118

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை போடப்படுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும்பாதை அமைக்கப்பட்டு தற்போது மெட்ரோ ரெயில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்தது. இதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நிறைவடைந்து, சுரங்கபாதை அமைப்பதற்கான பணிகள் நாளை மறுநாள் தொடங்குகின்றன.

இதற்கான பூமி பூஜை வரும் 23-ந்தேதி தண்டையார்பேட்டை போர்ட் டிரஸ்ட் மைதானத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா, விரிவாக்க திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளார்.